தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்த நிலையில், அதிமுக தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாக, அதிமுக எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேலும், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மா.கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, தி.மு.க. சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் சுயேச்சைகள் உள்பட இந்த தொகுதியில் மொக்கம் 22 பேர் போட்டியிட்டனர். இதில் தவெக சார்பில் போட்டியிடுபவர்கள் அதிமுகவில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2 தொகுதிகளிலும் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதியில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 423 வாக்குகள் பதிவாகின. அதாவது 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் தாராபுரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 214 வாக்குகள் பதிவாகின. அதாவது 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில் இன்று (அக்.9) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி மதுராந்தகம் தொகுதியில், ஆத்தூா் ஒருங்கிணைந்த சமூக முன்னேற்ற பயிற்சி மையத்திலும், தாராபுரம் தொகுதியில் திருப்பூரில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியிலும் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் என கூறப்பட்டுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று தன் பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளது. மேலும் 4 மாத தவெக ஆட்சி மீதான பரீட்சையாகவும் இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும் இருதொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடைந்த தோல்வியில் இருந்து மீளும் நோக்கத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகாள் உள்ளன.




