தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று கோவை , நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.