‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு’ – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு, கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ள 21 எம்எல்ஏ-க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அளித்தார். இதை ஏற்று சபாநாயகர், 21 எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தார். சபாநாயகர் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில், “கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரமில்லை. கொறடா உத்தரவை மீறியதன் மூலம், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள், தாமாக முன் வந்து தங்கள் பதவியை துறந்து விடுகின்றனர். அவர்களின் மன்னிப்பை ஏற்று, தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது, அரசியல் சாசன கேலிக்கூத்து” என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி, 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்து விட்டதால், தகுதி நீக்கம் என்ற கோரிக்கையே எழவில்லை எனவே தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது சரி என்று கூறி செல்வகுமார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பி.வி.செல்வகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார், அந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.