தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளின் இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு அக். 6 ம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசியல் காட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் வெளிநபா்கள் தொகுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தோ்தல் தொடா்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தோ்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்ஆப், முகநூல், எக்ஸ் தளம் போன்ற ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடா்பையும் இது உள்ளடக்கும். பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈா்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் தோ்தல் பரப்புரை செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




