ஈரோட்டில் முக்கோண காதல் விவகாரத்தில் கர்ப்பிணி காதலியை முன்னாள் காதலன் கழுத்தை நெரித்து கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன், வளர்மதி தம்பதியினர். இவர்களின் இளைய மகள் பிருந்தா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் பிருந்தா தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது பிருந்தா இறந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது மகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக எண்ணி அவரது பெற்றோர் சித்தோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த பிருந்தாவின் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் பிருந்தா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவின் பேரில்
தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் முதற்கட்டமாக பிருந்தாவின் செல்போனை ஆய்வு செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிருந்தா கல்லூரியில் படிக்கும் போதே தனது கணவரான கார்த்திக்கை காதலித்து வந்துள்ளார். அதே சமயத்தில் பிருந்தாவிற்கு அரவிந்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிருந்தா ஒரே சமயத்தில் கார்த்திக் மற்றும் அரவிந்த் ஆகியோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் கார்த்திக்கை கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாழ்ந்து வந்தார். இருப்பினும் முன்னாள் காதலன் அரவிந்தனுடனும் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.பிருந்தாவும் காதலன் அரவிந்தும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் காதல் கணவர் கார்த்திக் வெளியூர் சென்ற நிலையில் அரவிந்திற்கு போன் செய்து உன்னை பார்க்க வேண்டும், வீட்டில் யாரும் இல்லை வேகமாக வா என்று பிருந்தா அழைத்துள்ளார்.
இதனையடுத்து அரவிந்த், பிருந்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உன்னை என்னால் மறக்க முடியவில்லை, வீட்டை விட்டு வெளியே வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.அதற்கு பிருந்தா, தான் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன், தன்னால் வர முடியாது என மறுத்து உள்ளார். அப்படி என்றால் வா இரண்டு பேரும் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என அரவிந்த் கூறியுள்ளார். அதற்கு பிருந்தா தன்னை கொலை செய்து விட்டு நீயும் உயிரை மாய்த்துக் கொள் என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அரவிந்த், பிருந்தாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து பிருந்தாவின் மரணத்தை சித்தோடு காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து முன்னாள் காதலன் அரவிந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட தொடர்பில் இருந்த நான்கு மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







