முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்; முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கப்பெறுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவை விட கூடுதலாக 35% முதல் 75% வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 29ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே இந்த நிலையில், மாநிலத்தில் அதிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர், கனமழை எச்சரிக்கை விடுக்கப்ட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கு தாமதமின்றி மீட்புப் படையினை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கவும், பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவும், பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள், டெங்கு போன்றவை பரவாமல் தடுத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ முகாம்கள் நடத்திடவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

அத்துடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திட தேவையான நடவடிக்கைள் எடுத்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மழை காலத்தில் இடி, மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்திட, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் தேவையான நீர் இறைப்பான் இயந்திரங்களையும், மரம் அறுக்கும் கருவிகளையும், மணல் மூட்டைகளையும் தயார் நிலையில் வைத்திட வேண்டும் என்றும், நிலச்சரிவு, மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் 1070 கட்டணமில்லாத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற பெருமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் இரவுபகல் பாராது பணியாற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கும் முதலமைச்சர் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, தொடர்ந்து இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jeba Arul Robinson

விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு – நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

EZHILARASAN D

ஒரு சூறாவளி கிளம்பியதே! ரெய்னா தாண்டவம் தொடங்கியதே!

EZHILARASAN D