கேரள மாநிலம் பாறசாலையில் காதலனை காதலியே கொலை செய்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கேரள மாநிலம் முறியங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது இளைய மகன் ஷரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ரேடியாலஜி இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஷரோனுக்கும் உடன் பயின்று வந்த காரகோணம் பகுதியை சேர்ந்த கீரிஷ்மா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஷரோனும், கீரிஷ்மாவும் கல்லூரிக்கு செல்லாமலும், வீட்டிற்கு தெரியாதவாறும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கீரிஷ்மாவுக்கு மற்றொரு நபருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் ஷரோன் ராஜ், கீரிஷ்மாவின் கதலில் இடையே விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி, தனது ரெக்கார்ட் புத்தகங்களை வாங்குவதற்காக ஷரோன் அவரது நண்பர் ரெஜினுடன் சேர்ந்து கீரிஷ்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கீரிஷ்மா ஷரோனுக்கு குடிக்க குளிர்பானம், கஷாயம் மற்றும் பழம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்டுவிட்டு தனது நண்பன் பைக்கில் செல்ல புறப்பட்டபோதே தனக்கு வயிறு வலிப்பதாக நண்பன் ரெஜினிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் வீட்டிற்கு சென்ற ஷரோன் மயங்கி விழுந்த நிலையில், பாறசாலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உயர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து ஷரோனின் தந்தை ஜெயராஜ், பாறசாலை போலீசில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கீரிஷ்மாவையும், அவரது உறவினர்களையும் மற்றும் ஷரோன் ராஜ் நண்பர்களிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வேறு ஒருவருடன் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டதால் காதலை விட சொல்லி, தான் பல முறை கூறிய போதும் ஷரோன் கேட்காமல் தன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வற்புறுத்தியதாகவும், அதனால் தன்னுடைய தாத்தா பயன்படுத்தி வந்த கஷாயத்தை தான் குடித்து சாக போகிறேன் என்று கிரீஷ்மா மிரட்டியதாகவும், அதை தடுத்த ஷரோன் கிரீஷ்மாவின் கையில் இருந்த கஷாயத்தை வாங்கி குடித்ததாகவும் முதலில் தெரிவித்தார்.
ஆனால் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரனையில் கசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து ஷரோனை கொன்றதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே க்ரிஷிமாவின் ஜாதகத்தை பெற்றோர் பார்த்தபோது அவருக்கு 2 தார தோஷம் இருப்பதாகவும், இதனால் முதல் கணவன் இறந்துவிடுவார். இரண்டாவது திருமணம் தான் நீடிக்கும் எனவும் ஜோசியர் கூறியுள்ளார்.
இதனால் தனது காதலனை முதல் கணவனாக்கி உடனே கொலை செய்துவிட்டால் தற்போது நிச்சயம் செய்துள்ள மணமகனை திருமணம் செய்யும்போது தனக்கு எந்த பிரச்சினையும் வராது என திட்டமிட்டுள்ளார். இதனால்அவசரமாக தனக்கு தாலி காட்டும்படி கூறிய கிரிஷ்மா, ஒரு சில நாட்களில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து இளம்பெண் கிரிஷ்மாவை நெடுமங்காடு போலீசார் கைது செய்தனர். அவரை நெடுமங்காடு மகளிர் காவல் நிலையத்தில் கிரிஷ்மாவை விசாரணைக்காக உட்கார வைத்திருந்தனர். கழிப்பறைக்கு செல்லவேண்டும் என கூறி சென்ற கிரிஷ்மா அங்கிருந்த கழிப்பறை சுத்தம் செய்யும் மருந்தை குடித்து உயிரிழப்புக்கு முயன்றதாகவும் தெரிகிறது.
இதையடுத்து கிரிஷ்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 பெண் காவலர்களை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தில் இளம்பெண் கிரிஷ்மா காதலனை கொலை செய்ய பயன்படுத்திய கஷாய பாட்டில், விஷபூச்சி மருந்து பாட்டில், கஷாய பாட்டில் ஆகியவை போலீசாரிடம் சிக்காமல் இருக்க அவற்றை தீவைத்து அளித்ததாக அவரது தயார் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷரோனிடம் போலீசார் விசாரணை நடத்தும் போதும் தனக்கு காதலி கஷாயமும், குளிர்பானமும் கொடுத்து கொலை செய்ய முயன்றதை கூறவே இல்லையாம். கடைசிவரை தனது காதலியை போலீசாரிடம் காட்டிக்கொடுக்க மறுத்துள்ளார். ஆனால் போலீசார் ஷரோன் நண்பனான ரெஜினிடம் விசாரணை நடத்தியபோது கிரிஷிமாவின் வீட்டிற்கு சென்றுவந்த உடனேயே வயிறு வலிப்பதாக கூறியதாகவும், மயங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தான் போலீசாரின் சந்தேகம் கிரிஷ்மா மீது திரும்பியது. உயிர்போகும் நிலையிலும் காதலியை காட்டிக்கொடுக்க மறுத்த ஷரோனின் உண்மை காதல் விவகாரம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாகத் தான் ஆத்திரத்தில் கிரிஷ்மாவின் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் கிரிஷ்மாவின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.









