லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட கலவரத்தால் புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி, அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாட்டைவிட்டு வெளியேற்றவும் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டித்தும் அரசுக்கு எதிராக முழக்க மிட்டபடியும் பேரணியாக சென்றனர்.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்ற போது அவர்கள் மீது தடியடியும் நடத்தினார்கள். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாக நேற்று முன் தினம் சுமார் 2000 திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வாகனங்களை தீவைத்து எரித்ததோடு அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் பரவுவதை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் நடந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இப்போது வன்முறை, கிளர்ச்சி கும்பல்கள் எங்கள் நாடு கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்த தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சட்டவிரோத கலவரங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்துகின்றன. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாண்டி ஆகியோர், மற்ற அனைத்து தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸை புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும்.

கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன். லாஸ் ஏஸ்சல்ஸில் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களின் பிடியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விடுவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., காஷ் படேல் கூறியதாவது, “காவல்துறையினரை தாக்கினால் நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எப்படி இங்கு வந்தீர்கள் அல்லது எந்த இயக்கம் உங்களுக்கு பின் ஆதரவாக இருக்கிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. உள்ளூர் போலீசார் கூறுவதை நீங்கள் கேட்கவில்லை என்றால், நாங்கள் விசாரிக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.