ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு… மும்பையில் சோகம்!

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.

மகாரஷ்டிர மாநிலத்தில் மற்ற பகுதிகளில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டநெரிசல் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தது.

இதையும் படியுங்கள் : Gold Rate Today | நகை வாங்க ரெடியா? வார தொடக்கத்திலேயே குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு?

அதிக கூட்டம் காரணமாக ரயிலின் படிக்கட்டுகளில் அதிகளவிலான பயணிகள் தொங்கியபடி பயணித்தனர். தானேவை அடுத்த மும்ப்ரா ரயில் நிலையம் அருகே புறநகர் ரயில் சென்றபோது, படிக்கட்டுகளில் தொங்கிய 10க்கும் மேற்பட்டோர் தவறி தண்டவாளத்தில் விழுந்தனர். அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக மும்பை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக, தானே – மும்பை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.