தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன. 22) வெளியிடப்பட்டது.  நடப்பு மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து,…

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன. 22) வெளியிடப்பட்டது. 

நடப்பு மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, மக்களவைக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.  மக்களவைத் தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.   கட்சியின் கூட்டணிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன.  இதன் காரணமாக நடைமுறையில் உள்ள பட்டியல்,  வரைவுப் பட்டியலாக வெளியிடப்படும்.  அதன்படி,  இந்த ஆண்டில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் கடந்த அக். 27- ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் படங்கள் ஒளிபரப்பு – அயோத்தி நிகழ்வை கொண்டாடும் விதமாக ஏற்பாடு.!

வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடவும்,  அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவும் கடந்த டிச.9 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால்,  மிக்ஜாம் புயல் காரணமாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜன.22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன்படி,  சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் பெயர் சேர்த்துள்ளனர்.  மேலும், 6.02 லட்சம்  பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  3.23 லட்சம் வாக்களர் திருத்தம் செய்துள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்: 

மொத்தம் :  6,18, 90,348 வாக்காளர்கள்

ஆண்கள் : 3.03 கோடி

பெண்கள் : 3.14 கோடி

வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர்கள் : 3,480

மாற்றுதிறனாளி வாக்காளர்கள் : 4,32,805

புதிய வாக்காளர்கள் : 5,26,205

அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது
7 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.