சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எனினும் ஊரடங்கை பெரிதும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் வாகனங்களில் வெளியே சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா, என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு விதிகளை கடுமையாக்க வேண்டும் என காவல்துறையினருக்கு, டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில், வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில், சாலைகளில் தடுப்புகளை அமைத்து, வாகனங்களில் வருவோரை போலீசார் தடுத்து விசாரிக்கின்றனர். மருத்துவம் மற்றும் அவசரத் தேவைகளுக்காக செல்வோரை உடனே அனுப்பும் காவலர்கள், மற்ற தேவைகளுக்காக செல்வோரிடம் அறிவுரை வழங்கியும், எச்சரிக்கை விடுத்தும் அனுப்புகின்றனர்.







