சிவப்பு நிற கார், கருப்பு நிற மாஸ்க்..வாக்களித்தார் நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிவப்பு நிற காரில், கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்து நடிகர் விஜய் வாக்களித்தார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிவப்பு நிற காரில், கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பிரபலங்கள் அனைவரும் தங்களுக்கு உரிய வாக்குசாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.

சென்னை நீலாங்கரை 192-வது வார்டில், வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் போலவே இந்த தேர்தலுக்கும் ரசிகர் கூட்டம் இவரை பின் தொடர்ந்த படியும், செல்போனில் புகைப்படங்களை எடுத்தப்படியும் வந்தனர். இம்முறை இவர் சிவப்பு நிற காரில் கருப்பு நிற முகக்கவசம் அணிந்தபடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற தேர்தலுக்கு இவர் கருப்பு மற்றும் சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்தார், இதனால் நெட்டிசன்கள் அனைவரும் இவர் பெட்ரோல் விலையை எதிர்த்து அதை செய்ததாக கூறினர். இது சர்ச்சையானதை அடுத்து, நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் என்பது குறித்த அவரது தரப்பினர் விளக்கத்தை அளித்தனர். விஜய்யின் வீடு அருகில்தான் பூத் இருந்தது என்றும் அந்த பூத் உள்ள தெருவில் கார் செல்ல முடியாது என்பதால் அவர் சைக்கிளில் சென்றதாக விஜய் தரப்பினர் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், அவர் வாக்களித்த வாக்குச்சாவடியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக எவரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.