ஆஸ்திரேலியாவில் விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் நிதி நிலை காரணமாக மூடப்படுவது வேதனையளிப்பதாக இலங்கையைச் சேர்ந்த உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஷனாகா ஃபெர்னாண்டோ, LENTIL AS ANYTHING என்ற பெயரில் கடந்த 2000ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றை தொடங்கினார். இந்த உணவகத்தின் சிறப்பே, இங்கு உணவருந்துபவர்கள் அவர்கள் விருப்பப்படும் பணத்தைக் கொடுக்கலாம். அல்லது அங்கு சிறிது நேரம் தன்னார்வலராக வேலை பார்க்கலாம். இந்த உணவகம், வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இதனால் இங்கு மக்கள் கூட்டம் இங்கு அதிகமாகவே இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த உணவகம் ஆரம்பித்ததில் இருந்து இதற்கான வரவேற்பு அமோகமாக இருந்ததால், அடுத்தடுத்து இரண்டு கிளைகள் தொடங்கப்பட்டன. 3 கிளைகளுடன் இயங்கி நல்ல வரவை பெற்று வந்த இந்நிறுவனம் கொரோனா காலத்தில் வந்த ஊரடங்கு மற்றும் பொருளாதார சரிவால் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது. மேலும் ஒரு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்தால் அதில் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானமாக திரும்பக் கிடைத்தது. நிதி நெருக்கடியால் கடந்த ஜனவரி மாதம் இந்த உணவகத்தின் ஒரு கிளை மூடப்பட்டது.
இந்நிலையில் மீதமுள்ள 2 கிளைகளும் வருகிற பிப்ரவரி 27ம் தேதி மூடப்பட உள்ளது. இது தன் இதயத்தை நொறுக்குவதாக உள்ளதாகவும், பணம் என்பதை கடந்து மனிதர்களுடனான உறவை இழப்பதைப் போன்று உணர்வதாகவும் ஷனாகா ஃபெர்னாண்டோ வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இவர் அப்பகுதியில் மக்களிடம் நல்வரவேற்பை பெற்றவர் ஆவர். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ’LOCAL HERO’ என்ற விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 21 ஆண்டுகளாக இந்த உனவகங்கள் மக்களுக்கு சிறப்பான சேவையை அளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.