இங்கிலாந்தில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ், ராணி 2-ம் எலிசபெத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் அந்நாட்டு அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ரிஷி சுனக்கை விட 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டுகளை பெற்று லிஸ் டிரஸ் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். மேலும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ராஜினாமா கடிதத்தை ஸ்காட்லாந்தில் விடுமுறையை கழித்து வரும் ராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து வழங்கினார். பின்னர் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், ராணி 2-ம் எலிசபெத்தை சந்தித்து பேசினார். அப்போது, அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரியதாகவும், அதற்கு ராணி எலிசபெத் புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளை தொடங்குமாறு அறிவுறுத்தியதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கிலாந்து ராணியின் அழைப்பை அவரது கரங்களை முத்தமிட்டு லிஸ் டிரஸ் ஏற்று கொண்டதாகவும்,அரண்மனை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் புதிய பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இங்கிலாந்து அரச பாரம்பரிய நடைமுறைகளின்படி புதிய பிரதமர்பதவியேற்பு விழா இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அரச மரபை மீறி ஸ்காட்லாந்தில் இந்த விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதிதாக பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ் இங்கிலாந்தின் பொருளாதாரம், ஆற்றல் நெருக்கடி மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு முறையை வழங்குவதாக நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








