பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், அங்கு கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 3வது நாளாக இன்று பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் டிராக்டர்களில் செல்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பசவராஜ் பொம்மை, “தற்போதைய வெள்ளப் பெருக்கிற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறான நிர்வாகமும், திட்டமிடப்படாத செயல்களுமே காரணம்” என்று குற்றம்சாட்டினார். இதனால், நீர்நிலைகள் நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெங்களூரு நகரம் இயல்பு நிலைக்கு திரும்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.
கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெங்களூருவில் பெய்துள்ளது. அனைத்து குளங்களும் ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. அவைகளில் சில உடைந்து வெள்ளப்பெருக்காக தெருக்களில் ஓடுகிறது. இதனால், பெங்களூரு முழுவதும் சிரமங்களை எதிர்கொள்வது போல் ஒரு பிம்பம் உருவாக்கப்படுவதாகவும், அது உண்மைக்குப் புறம்பானது என்றும் கூறினார்.
குறிப்பாக, மகாதேவபுரா பகுதியில் 69 குளங்கள் இருப்பதால் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல், அனைத்து நிறுவனங்களும் தாழ்வான பகுதிகளில் உள்ளதால் நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தொடர் கனமழையால் கர்நாடக தலைநகர் பெங்களூரு உட்பட பல மாவட்டங்கள் கனமழையால் வெள்ளப்பெருக்கு போன்ற சூழலை எதிர்கொண்டுள்ளன. இந்த வெள்ளச் சூழலை சமாளிக்க 300 கோடி ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.