போக்குவரத்து விதிகள் தெரியாதவர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கக் கூடாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சாலை பாதுகாப்புத் துறை சார்பில் தோழன் என்ற அமைப்புடன் இணைந்து சாலை விபத்து ஏற்படும் முக்கிய பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாகச் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 36 பள்ளிகளில் மாணவர்களுக்குச் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டது. அதற்கு ‘சகோ- கோ சேஃப்’ (SAGO-GO SAFE) என்று பேரிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, நந்திவரம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அப்போது விழாவில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இப்பொழுது இருக்கும் சூழலில் பொதுமக்கள் பலரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். எனவே சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் அவசியமாகிறது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னால், நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டு போட்டுக் கொண்டு போராட வந்து விடுகின்றனர் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்குச் சாலைகளை விரிவுபடுத்தித் தான் ஆக வேண்டும். சாலை விரிவாக்கம் செய்தால் தான் பயன்பாட்டில் இருக்கும் கார்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்!’
மேலும், இரண்டு வழிச் சாலைகளை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். அப்படியானால் இரு புறங்களிலும் நிலங்களைக் கையகப்படுத்தித் தான் ஆக வேண்டும். கையகப்படுத்துவது எதற்காக கார்கள் போவதற்காக, கார்கள் எதற்காக மக்கள் பயன்பாட்டிற்காக. போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தான், விபத்துக்கள் கூடுதலாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதனால், போக்குவரத்து விதிகளைத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே லைசன்ஸ் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், விபத்து இல்லாமல் சாலையை உருவாக்கத் தமிழ்நாடு முழுவதும் 400 பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.








