மகன், மகளை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் – உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் மகன் மற்றும் மகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த தாய், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளகோவில் அருகே உள்ள அத்தாம்பாளையத்தைச்…

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் மகன் மற்றும் மகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த தாய், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளகோவில் அருகே உள்ள அத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகசம்பத். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு ஹர்சிதா என்ற மகளும் கலைவேந்தன் என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கு ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து சாலையில் மற்றொரு வீடும் உள்ளது. ஹர்சிதா அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும், கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ரேவதிக்கு தலைவலி இருந்து வந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். தலைவலி அதிகமாகும்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் அவருடைய செயல்பாடு இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு கனகசம்பத் கடை வீதிக்கு சென்று உள்ளார். அப்போது ரேவதியும், அவருடைய 2 குழந்தைகளும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தோட்டத்து சாலை வீட்டிற்கு ரேவதி சென்றுள்ளார்.

கடைவீதிக்கு சென்ற கனகசம்பத் இரவு 7மணிக்கு வீட்டிற்குத் திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து, தோட்டத்து சாலையில் உள்ள வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் ரேவதி படுத்திருந்த நிலையில் 2 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கனக சம்பத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகளின் அருகில் இரும்பு கம்பி இருந்துள்ளது. கட்டிலில் படுத்து இருந்த ரேவதியின் அருகில் விஷபாட்டில் இருந்துள்ளது.

இரண்டு குழந்தைகளையும் கம்பியால் அடித்து விட்டு, விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்றதாக ரேவதி தனது கணவர் கனகசம்பத்திடம் கூறியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகளையும், விஷம் குடித்த ரேவதியையும் மீ்ட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 குழந்தைகளையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ரேவதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பள்ளி முடிந்ததும் தோட்டத்து சாலை வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற ரேவதி, அங்கு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இரண்டு குழந்தைகளையும், இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொன்று விட்டு, அவரும் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பெற்ற குழந்தைகளை தாயே கொடூரமாக கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.