இந்தியன் – 2 திரைப்படத்தில் கமல்ஹாசனோடு நடிகர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போடப்பட்டது.
இதனிடையே படத்தின் பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியன் 2 படம் எப்போது தொடங்கும் என்று தெரியாததால், இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின.
இதையடுத்து ’இந்தியன் 2’ திரைப்படத்தை நிறைவு செய்யாமல், மற்ற திரைப்படங்களை இயக்க ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஐதராபாத்திலும் ஷங்கருக்கு எதிராக லைகா வழக்குத் தொடர்ந்தது. தற்போது பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.
சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் “He is Back” என்ற வரிகளோடும் கமல்ஹாசனின் இந்தியன் தாதா தோற்றமும் இடம் பெற்றுள்ளது.இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விக்ரம் படத்தின் வெற்றியால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களைத் தாண்டி திரைத்துறையினரிடமும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் ஒரு இன்னொரு தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலினும் இணைந்துள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டிருந்தார் உதயநிதி. அதில் நல்ல லாபம் கிடைக்கவே மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது.
இதேபோல உதயநிதி நடிக்கும் ஒரு படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.







