தீ பரவட்டும்” என்ற ஹேஷ் டேக்கை முன் வைத்து, ஆளுநர் விவகாரத்தில் ஆதரவு வழங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்வதை கண்டித்தும், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி, பாஜக ஆட்சி செய்யாத, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
https://twitter.com/ArvindKejriwal/status/1647187595531812864?s=20
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் செயல்படுகின்றனர். பாஜக ஆளாத மாநிலங்களில் அரசு மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையன்றி கிடப்பில் போடுகின்றனர். அதிகபட்சமாக டெல்லி துணை நிலை ஆளுநர், மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்குகூட ஒப்புதல் தராமல் தடுத்து நிறுத்தினார். கல்வி, சுகாதாரம், குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எங்கள் அரசை செயல்பட விடாமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். இதுபோன்ற பனிப்போரை ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு, மாநில அரசு மீது தொடுக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது போல், டெல்லியிலும் விரைவில் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்திருந்தார்.
https://twitter.com/mkstalin/status/1647460531878473729?s=20
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தீ பரவட்டும் என்ற ஹேஸ்டேகை வெளியிட்டுள்ள அவர், ” தீர்மானத்தைப் பாராட்டி எங்கள் குழுவில் இணைந்ததற்காக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றி. உண்மையில், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உயர்ந்தது. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரங்களை, நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது என கூறியுள்ளதுடன், தீ_பரவட்டும்!” என பதிவிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







