கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஜேடிஎஸ், காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், பாஜகவில் மட்டும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. காரணம், கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை என்பதால் தான். இதனால் அதிருப்தி அடைந்த் எம்.எல்.ஏக்கள் பலர் பாஜகவில் இருந்து தொடர்ந்து விலகி வருவதோடு, அவர்களுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் அவர்களுக்கும் சீட் வழங்கப்படாமல் இருப்பதால் அவரும் முழு அதிருப்தியில் இருந்து வருகிறார்.
மேலும், இந்த முறை அவரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக மேலிடம் உத்தரவிட்டதாகவும், புதியவர்களுக்கு விட்டு கொடுக்கும்படி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என கூறியதோடு, கட்சியை விட்டு விலக போவதாகவும் அறிவித்திருந்தார். இதனையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் ஷெட்டரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர் ” 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றியும், பாஜக தன்னை நடத்திய விதம் வேதனை அளிக்கிறது. இதனால் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன், மேலும் கட்சியின் முதன்மை உறுப்பினர்
பதவியையும் ராஜினாமா செய்கிறேன். அடுத்து ஹூப்ளி-தர்வாட் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதா அல்லது கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பதை பின்னர் முடிவு செய்வேன் ” என கூறிய அவர், இன்று சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாஜக-வை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஹுப்பள்ளியில் உள்ள தார்வாட் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வாக தற்போது இருந்து வருகிறார். இவர் இதற்கு முன் ஆறு முறை ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளதோடு, கர்நாடக மாநில முதல்வராக மட்டும் இல்லாமல் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், உட்பட பல்வேறு உயர் பதவிகளையும் வகித்தவர்
ஆவார்.
- பி.ஜேம்ஸ் லிசா










