மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ விசாணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகியுள்ளார்.
அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.
இதனையடுத்து கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. புதிய கலால் கொள்கை குறித்து ஆலோசிக்க அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு பிபவ் குமார் சென்று இருந்தாரா என்று அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி இருந்ததாக தகவல் வெளியாகின.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று (ஏப்ரல் 16) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ அனுப்பிய சம்மன் அனுப்பியது. இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நான் ஊழல்வாதி எனில் உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. பாஜக என்னை கைது செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டிருந்தால் நிச்சயமாக சிபிஐ-ன் நடைமுறையை நான் பின்பற்றுவேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ அலுவலகத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை தந்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை கண்டித்து சிபிஐ அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி எம்பி சஞ்ஜய் சிங் , பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







