சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகி வரும் மாணவி ஷா.தபித்தாவின் கோரிக்கையை ஏற்று, அவரது பயிற்சிக்கு துணை நிற்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.
மாணவி ஷா.தபித்தா கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஒரு சைக்கிளிங் வீராங்கனை ஆவார். இவர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல் கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
தற்போது மாணவி ஷா.தபித்தா நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்சல்லேன்ஸ் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டிப் போட்டிகளில் சாதித்துள்ள மாணவி ஷா.தபித்தா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருவதால் தனது பயிற்சிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால், இன்னும் பல்வேறு சாதனைகளை படைத்து நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க உதவியாக இருக்கும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மாணவி ஷா. தபித்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவிக்கு மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவி தபித்தா கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான மிதிவண்டியை வழங்கினார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி, அதில், மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டிப் போட்டிகளில் சாதித்து வரும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கை ஷா.தபித்தா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருவதால், தனது பயிற்சிக்காக பிரத்யேக மிதிவண்டி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அவரது பயிற்சிக்கு துணை நிற்கும் விதமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் & உபகரணங்களை வழங்கினோம். தங்கையின் கனவுகள் வெல்லட்டும் என பதிவிட்டு மாணவிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








