இரை என நினைத்து பெண்ணை தாக்கி 100 அடி தூரம் இழுத்துச்சென்ற சிறுத்தை – #Maharashtra -வில் அதிர்ச்சி!

புனேவில் சிறுத்தை தாக்கியதில் 40 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜாதா ரவீந்திர தேரே (40). இவர் இன்று (அக். 9) காலை 6…

புனேவில் சிறுத்தை தாக்கியதில் 40 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜாதா ரவீந்திர தேரே (40). இவர் இன்று (அக். 9) காலை 6 மணியளவில் தனது வீட்டின் முன்புறம் உள்ள குளத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, சிறுத்தை ஒன்று திடீரென அவரை பின்னால் இருந்து தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சுஜாதா கத்தியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் ரவீந்திர தேரே, உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். தொடர்ந்து, அந்த சிறுத்தை சுஜாதாவை வீட்டில் இருந்து 100 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது. பின்னர் அவரை அங்கேயே விட்டு தப்பி ஓடியது.

இதில், சுஜாதாவின் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும், உயிரிழந்த சுஜாதா தேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆலேயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுத்தை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறியதால்தான் சுஜாதா உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தையை பிடிக்க 40 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.