லியோ திரைப்பட டிரைலர் ஆபாச வசனம் தொடர்பாக நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிறுவனத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது :
லியோ திரைப்படத்தின் டிரைலர் விஜய் பேசிய ஆபாச வசனம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிரைலரை தணிக்கை செய்யாமல் வெளியிட்டது சட்டப்படி குற்றம். பல ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய், அறிவுரை கூறும் படங்களில் நடிக்காமல், தவறான பாதைகளில் கொண்டு செல்லும் வகையில் நடித்திருப்பது கண்டிக்கத்தது.
எனவே உடனடியாக லியோ திரைப்படத்தில் அமைந்துள்ள ஆபாசமான வசனத்தை நீக்க வேண்டும். மறுதணிக்கை செய்து படத்தை வெளியிட வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.







