நடிகர் விஜய்-ன் ‘லியோ’ பட சிறப்பு காட்சிகள் தொடர்பாக புதிய அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் அர்ஜுன் என மிகப்பெரும் நடிகர் பட்டாளமே களமிறங்கியுள்ளனர்.
‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 5-ம் தேதி வெளியானது. வெகுநாட்களாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. வெளியான சில நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ‘லியோ’ ட்ரெய்லர் சாதனைப் படைத்தது.
இதனிடையே நேற்று முன்தினம் இப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அக்.19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும், காலை 7 மணிக்கும், அக்.20 முதல் 24-ம் தேதி வரை காலை 7 மணிக்கும் ‘லியோ’ சிறப்பு காட்சி திரையிட படக்குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. மேலும் நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி அளித்தது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
இந்நிலையில், அனைத்து திரையரங்குகளும் ஒரு சிறப்பு காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு புதிய அரசாணையில் தெரிவித்துள்ளது. கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 19 முதல் 24-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் வரை திரையிடலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.








