அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
சசிகலா வெளியே வந்த காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது. ஆனால், சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்த உரிமையில்லை என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை சாந்தோமில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், அதிமுகவில் டிடிவி தினகரனை சேர்த்துக் கொள்வோம் என்று கே.பி.முனுசாமி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதிமுக சட்ட விதிகளின்படி ஒருவர் நீதிமன்றம் சென்றாலோ, மாற்றுக் கட்சிக்கு சென்றாலோ, அவரது அடிப்படை உறுப்பினர் பதவி தானாகவே போய்விடும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் தினகரன், எப்படி அதிமுக அனுதாபியாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை ஆகவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனவும், இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சித்தார்.







