கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையைத் இன்று திறந்து வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதன் மூலம் LCA Tejas எனப்படும் போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“பாதுகாப்பு உபகரணங்களைப் பெறுவதற்கு நாம் இனியும் அண்டை நாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை, தற்போது HAL நிறுவனம் ரூ.48,000 கோடி ஆர்டர்களை பெற்றுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒப்பந்தம். LCA Tejas போர் விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மட்டுமல்லாது இதர போர் விமானங்களோடு ஒப்பிடுகையில் மலிவானதாகவும் உள்ளதால் பல நாடுகள் இந்த விமானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.” என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

“பெங்களூரூவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது உற்பத்தி தடமானது 35 ஏக்கரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் தற்சார்பு கொள்கைகளை ஊக்குவிக்கும். தற்போதைய 83 ஜெட் விமான ஆர்டர்களை ஐந்து ஆண்டுகளில் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் இதனை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.” என HAL நிறுவனத்தின் பொது மேலாளர் ஜெயதேவா தெரிவித்துள்ளார்.







