நம்மை அறியாமல் நமக்குள் ஊடுருவும் பரவச பண்பு நட்பு. சங்க காலம் தொட்டு இன்றுவரை நட்பின் பெருமை போற்றும் பாடல்கள் உள்ளன. யாரிடம் நட்பு பாராட்டுவது, யாரை விலக்குவது என்பதை இலக்கியங்கள் தெளிவுபட கூறுகின்றன, அந்த கருத்துகள் அடங்கிய இனிய திரையிசைப்பாடல்கள் குறித்த ஒரு தொகுப்பு.
உள்ளத்தில் நஞ்சை வைத்துக்கொண்டு, நாவினில் அன்பு வைத்து இனிய முகத்தோடு பழகும் சிலரிடம் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுரை தருகின்றன சங்க காலப் பாடல்கள் சில. கூடா நட்பை கூறும் வகையில் நட்பியல் என தனி அதிகாரத்தை தந்த வள்ளுவர், 50-க்கும் மேற்பட்ட குறள்கள் மூலம் நட்பு குறித்து பாராட்டுகிறார்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு என குறிப்பிட்டவர், ‘முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா, வஞ்சரை அஞ்சப் படும்’ என்கிறார்.
முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசியபோதும் அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவினை விட்டுவிட வேண்டும் என்பதை இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே என திருவருட் செல்வர் திரைப்படத்தில் இடம்பெற்ற நஞ்சினை நெஞ்சில் வைத்து, நாவினில் அன்பு வைத்து என்ற பாடலில் இத்தகையோர் நட்பை விலக்க வேண்டும் என குறிப்பிடுகிறார் கண்ணதாசன்.
கையொன்று செய்ய விழியொன்று நாட கருத்தொன்று எண்ணும் போது நான் செய்கின்ற பூசையை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே என்கிறார் பட்டினத்தார். இதனை உள்வாங்கிய மகாகவி பாரதி “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி” என பாடுகிறார்.
இதனையும் படியுங்கள்: காற்று வாங்கப் போனேன்…
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே என தாய் சொல்லை தட்டாதே படத்தில் வரிகளாக தந்திருப்பார் கண்ணதாசன்.. ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்கிறார் அருட்பிரகாச வள்ளலார். இதனை ரங்கூன் ராதா திரைப்படத்தில் சிவாஜிகணேசன் தன் சொந்தக் குரலில் பாடியிருப்பார்.
பள்ளிக் கால நண்பர்கள் சந்திக்கும்போது அந்த பால்ய கால நினைவுகளை அசைபோடுவதில் உள்ள சுகத்தை நவீன உலகில் நாம் பெற்றுவிட முடியாது. இன்றைய அவசர உலகில் நம் அருகில் இருப்பவர்களோடு நட்பு பாராட்ட நேரம் ஒதுக்குவதில்லை.
உறவை விட சிறந்த பண்பாக கருதப்படும் நட்பை போற்றி நலம் காண்போம் என்பதே திரையிசைப்பாடல்கள் சொல்லும் கருத்து… நட்பு பாராட்டுவோம்…









