தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது:
“இன்று சட்டம் ஒழுங்கு பற்றி பேச எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். மக்கள் பிரச்சினை சார்ந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என்கின்ற முறையில் எனது கேள்வியை நான் தொடங்குகின்றேன். கொள்கை விளக்கக் குறிப்புகளில், வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் 2024-ம் ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். கொலை, கொள்ளை முயற்சி, கலவரங்கள், பாலியல் குற்றங்கள் அனைத்தும் குறைந்திருக்கிறது என அது கூறுகிறது. சாதிய பாகுபாடு குறைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மாமன் காதுகுத்து திட்டம்
தவெக ஆட்சி அமைத்து 116 நாட்கள் ஆகிறது. நீங்கள் புதிய திட்டம் கொண்டு வந்ததைவிட, நாங்கள் கொண்டுவந்த பல திட்டங்களை ரத்து செய்திருக்கிறீர்கள். எங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்றது. ஆனால், இன்று தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது.
விவசாயக் கடன் தள்ளுபடி, வருடத்திற்கு 6 சிலிண்டர் என தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். முழுத் தள்ளுபடியைத் தவணைத் தவணையாக அளித்து வருகிறீர்கள். ஆறு சிலிண்டர் எனக் கூறிவிட்டு, தற்போது மூன்று சிலிண்டர் எனக் கூறுகிறீர்கள். அதுவும் அடுத்த வருடம்தான் எனக் கூறுகிறீர்கள். தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் என்பதைவிட, தாய்மாமன் காதுகுத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம்.
காவல்துறை சீர்திருத்தத்திற்காக இதுவரை அமைக்கப்பட்ட காவல் ஆணையங்களில் நான்கு ஆணையங்கள் எங்கள் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ரீல்ஸ் அதிகமாக ரீச் ஆனால் போதும் என்ற மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நீண்டகால விடுப்பு நாங்கள் அளித்தோம். தற்போது, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீண்டகால விடுப்பு அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். அதனை இந்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுத்தது எங்கள் அரசு. ஆனால், தற்போது சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. தினந்தோறும் செய்தித்தாளைத் திறந்து பார்த்தால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை செய்திகள்தான் வருகின்றன. தமிழ்நாட்டில் தினந்தோறும் வெட்டுக்குத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தில் ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆணவக்கொலை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இந்த ஆட்சியில் கௌரவக் கொலையாக மாற்றியிருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் தினந்தோறும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியின் பெயரைச் சொல்லி ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டார். அவர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் செய்த அட்டூழியம்
சென்னையில் ஆலந்தூரில் வேம்புலி என்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். ராணிப்பேட்டை ஆளுங்கட்சி நபர் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. வடசென்னையில் பாம்பு தினேஷ் என்பவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்திருக்கிறார். இவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆளுங்கட்சியைச் சார்ந்த பெண் நிர்வாகிக்கு, இவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் பாலியல் தொல்லை அளிக்கிறார்கள். கரூர் குளித்தலையில் ரமேஷ் என்பவர் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். 116 நாட்களில் ஆளுங்கட்சியினர் செய்த அட்டூழியத்திற்கு பெரிய பட்டியல் என்னிடம் இருக்கிறது.
முதலமைச்சருக்குத் தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா?
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராடினார்கள். அதற்கு மெரினாவில் போராட்டம் நடத்த இந்த அரசு அனுமதி தரவில்லை. பெசன்ட் நகர் கடற்கரையில் அனிதாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி தரவில்லை. மதுரையிலும் காவல்துறையினர் தங்களுடைய அடையாளப் பெயர் இல்லாமலேயே உள்ளே சென்று தாக்கியிருக்கிறார்கள். தலைமைச் செயலாளரும் டிஜிபியும் தான் இதற்கெல்லாம் காரணம் என ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினர் கூறுகிறார்கள். இதெல்லாம் முதலமைச்சருக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என கேள்வி எழுகிறது.
பெரியார் திடலுக்குச் சென்று முதலமைச்சர் மரியாதை செய்தார். நீட் தேர்வு சம்பந்தமாக ஒரு இருசக்கர வாகனப் பேரணியை ஏற்பாடு செய்தார்கள் திராவிடக் கழகத்தினர். ஆனால், நீதிமன்றம் வரை சென்று தான் அதனை அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை.
இவருக்கு பதில் இவர்
நாங்கள் இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பிய எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் பதில் கூறவில்லை. நாடகத்தில் நடிப்பவர்கள் ஒரு நாடகத்திலிருந்து வேறொரு நாடகத்திற்குச் சென்றால், ‘இவருக்கு பதில் இவர்’ என்று அறிவிப்பார்கள். அதேபோலத்தான் இங்கு இருக்கிறது.
இவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளன. முதலமைச்சரின் பதிலுரைக்கு இன்னும் மூன்று நாட்கள் நேரம் இருக்கிறது. நன்றாக பிரிப்பேர் செய்து கொண்டு வாருங்கள். மீண்டும் எங்கள் மீது பழி போடாமல், கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளியுங்கள். எங்கள் ஆட்சி நடைபெற்றதா, உங்கள் ஆட்சி நடைபெற்றதா என வேண்டாவாதம் பேசாதீர்கள். சம்பந்தமில்லாமல், லாஜிக்கே இல்லாமல் குட்டிக்கதை கூறாமல், எங்களுடைய கேள்விகளுக்கு நேராக முதலமைச்சர் பதில் கூற வேண்டும்” என்றார்.




