தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

ட்விட்டர், அமேசான், கூகுள் , மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட்டும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக…

ட்விட்டர், அமேசான், கூகுள் , மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட்டும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மை காலமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது வாடிக்கையாகவே கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவரின் இந்த செயல்பாடுகளை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான அமேசான், பேஸ்புக், மெட்டா ஆகியவையும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கமும் செய்தது.

இதனையடுத்து தற்போது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இன்று 11-ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவின்படி அந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு, பொறியியல் பிரிவு முதலிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றி வருபவர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய நிறுவனங்களும் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக ஷேர்சாட் மற்றும் மோஜ் ஆகிய செயலிகளை நடத்திவரும் இந்திய நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 20% பேரை பணிநீக்கம் செய்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திங்கள் கிழமை காலை வந்த இமெயிலால் பணியாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியிலும் பை ஜூஸ்(BYJU’S) ,கார்ஸ் 24 (Cars24) ஓலா(Ola) மீசோ (Meesho) போன்ற எண்ணற்ற ஸ்டார்டப் கம்பெனிகள் பணி நீக்கம் குறித்து அறிவித்தன. கொரோனா காலத்தில் கிடைத்த நிதியில், தேவைக்கு அதிகமாக பணியாளர்களை, பணி அமர்த்தி அதனை சரியாக செயல்படுத்த முடியாமல் , நஷ்டங்களை ஏற்படுத்தியதே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் 2023ம் ஆண்டின் ஜனவரியில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 1600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் 1,54,336 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் 2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள் வேலை இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.