தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அக்டோபர் 2026 மாதத்தில் கனமழை பெய்தது. ஆனால் நவம்பர் 2026 மாதத்தில் இதுவரை போதுமான மழை பெய்யவில்லை. மாறாக, அதிகாலை வேளைகளில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பனிபொழிய ஆரம்பித்துள்ளது. அவ்வப்போது நிலவுகின்ற வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு நிலவி வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பாதை!
அதன்படி, சுமார் 0.9 கி மீ உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் (நவம்பர் 26) இன்று, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




