எகிப்தில் பயங்கர தீ விபத்து: 31 பேர் பலி; 21 பேர் படுகாயம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து தீ விபத்து; 20-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

டேங்கர் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபரீதம்!

எகிப்தின் கிரேட்டர் கெய்ரோ பகுதியில் உள்ள கிசா மாகாணத்தின் வாராக் (Warraq) பகுதியில் நவம்பர் 25 – புதன்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள ரிங் ரோடு (Ring Road) நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் டேங்கர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கரில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தொடர்ந்து அருகில் சென்றுகொண்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கும் தீ பரவியது. அடுத்தடுத்து வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால், அவற்றுக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயில் கருகிய வாகனங்கள்!

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினர் தீப்பற்றி எரிந்த வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அகமது சமீர் என்பவர், எரிபொருள் டேங்கர் மற்றும் பல கார்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், எரிந்து கருகிய வாகனங்களில் இருந்து குறைந்தது 8 பேரின் உடல்கள் மீட்கப்படுவதையும் நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “மிகப்பெரிய தீ விபத்தாக இருந்தது. தீ பரவியதால் கார்கள் ஒன்றோடொன்று சிக்கிக்கொண்டன. அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கே அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைச் சந்திக்க சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் காலித் அப்தெல் கஃபார் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆரம்பகட்ட கணக்கீடுதான் என்றும், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் தொடரும் சாலை விபத்துகள்!

எகிப்தில் அதிவேகம், மோசமான சாலைப் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம், எகிப்தின் தெற்குப் பகுதியில் உள்ள பெனி சூயெஃப் மாகாணத்திற்கு அருகே பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்; 16 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.