சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: ஜோசப் விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? – டிடிவி தினகரன்!

தமிழக மக்கள் அச்சமின்றி, வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

அதேபோல சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அகில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.