திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் என்டிஏ கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,
“நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன மண் மதுரை மண். ஆனால் இன்று நீதியரசர்கள் தாக்கபடுகிறார்கள். உதயநிதியை முதலமைச்சர் ஆக வேண்டும் என ஐந்து ஆண்டுகளாக முயற்சி நடந்து வருகிறது.
கையில் புத்தகத்தை வைக்க வேண்டிய மாணவர்கள் இன்று கையில் கஞ்சாவை வைத்துள்ளார்கள். டாஸ்மாக்கில் கொள்ளை, மணலில் கொள்ளை, இதன் மூலம் திமுக குடும்பம் மட்டும் 50 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளது. தீபம் ஏற்ற வேண்டுமென நீதி அரசர் கூறுகிறார். ஆனால் திமுக அரசு தீபம் ஏற்ற முடியாது என மறுக்கிறது.
காவல்துறை தமிழக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு முழுவதும் கெட்டுப் போய்விட்டது. நீதி வெல்ல வேண்டும் திமுக அரசை தோற்கடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.







