மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை கூடல் நகர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. நேற்று இந்த பணி நடைபெற்ற போது, அதே பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் வெடித்ததில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் என்ற தொழிலாளி மீது மண் சரிந்து விழுந்தது. இதனால் அவர் 15 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, சக்திவேலின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலானது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது.
இச்சம்பவத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பள்ளத்தில் சிக்கி, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், மூன்று மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தியினைக் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்







