மாடலிங் பெண்ணின் ஆபாச படத்தை பெற்று 3 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குனரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த மாடலிங் துறையில் உள்ள இளம் பெண் ஒருவர் மாடலிங் துறையில் நல்ல வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு வாட்ஸ் அப் எண்ணில் இருந்து ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டிற்கு மாடலிங்
தேவைப்படுவதாகவும் கூறி அதில் தொடர்பு எண் தீக்ஷா ஜோதி என்பவருடைய பெயருடன் வந்துள்ளது. இதனை தொடர்ந்து இளம் பெண் அந்த தீக்ஷா ஜோதியை தொடர்பு கொண்டு இருக்கிறார் அவர் கேட்ட புகைப்படங்களை எல்லாம் அனுப்பி இருக்கிறார் “போல்ட் மாடலிங் ” என சொல்லக்கூடிய அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண மாடலிங் தேவைப்படுவதாக கூறியதை நம்பிய இளம் பெண், அதனையும் புகைப்படமாக அனுப்பி இருக்கிறார்.
இதனை பெற்றுக் கொண்ட அந்த நபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மூன்று லட்ச ரூபாய் வரை பணம் கேட்டதாக இளம் பெண் சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, அது தென் தமிழகத்தில் உள்ள ஒருவரின் எண் என தெரியவந்தது. ஆனால் அவருக்கும் இந்த புகாருக்கும் சம்பந்தமில்லை என்பதை கண்டுபிடித்த போலீசார், உண்மையான குற்றவாளி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகார் கொடுத்த இளம் பெண்ணுடன் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் அப்போது கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அன்ப்ரண்ட் செய்துவிட்டு சென்றுவிட்டார் எனவும் அவரை பழிவாங்கவே இந்த செயலை செய்ததாக கூறியிருக்கிறார். சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்ததாகவும் ஒரு சில குறும்படங்களை ரஞ்சித் இயக்கியிருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.








