தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை திறமையாக செயல்பட்டதாக கூறி காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், அனைத்து காவல்துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட காவல்துறை எஸ்பிக்கள், மற்றும் காவல்நிலையங்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “தமிழ்நாடு காவல்துறை கடந்த சில மாதங்களில் பெரும் சவால்களை சிறப்பாகக் கையாண்டது. விநாயகர் சிலை ஊர்வலம் சிறப்பாகவும், அமைதியாகவும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பல வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டு அமைதியை நிலை நாட்டியது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்புடைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் அசாதாரண சூழ்நிலையில் பாதுகாப்புப் பணிகளை துரிதமாக கையாளும் திறனில் ஓர் உயர்ந்த அளவீட்டினை எட்டியது நம் காவல்துறை. இமானுவேல் சேகரன் நினைவு நாள், மருது சகோதரர்கள் பிறந்த நாள் நிகழ்வுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு, இந்நிகழ்சிகள் சிறப்புற நடைபெற காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஒரு வாகனம் வெடித்தது. அதில் இருந்த நபரும் இறந்தார். தீபாவளி முந்தைய நாளான அன்று அந்த நிகழ்வில் அனைத்து தடயங்களையும் திரட்டி இறந்த நபரை அடையாளம் கண்டு, ஆறு முக்கிய குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தது நமது காவல்துறை. இந்தச் சம்பவத்தை அறிவுப்பூர்வமாகவும், துரிதமாகவும், பொறுப்புணர்வுடனும் கையாண்டதால் தீபாவளி பண்டிகை எந்தப் பதட்டமும் இல்லாமல், கோலாகலமாக கொண்டாடச் செய்தது தமிழ்நாடு காவல்துறை. கோவையில் கார் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றுகளை வழங்கி கௌரவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தேவர் ஜெயந்தி விழாவில் சுமார் 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெறச் செய்தார்கள். அனைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும், சவால்களையும் கடந்த சில மாதங்களாக திறம்பட கையாண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து வீரத்துடனும், விவேகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கடமையாற்ற வாழ்த்துகிறேன்” என சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.








