“தமிழகத்தில் 32வது மெகா தடுப்பூசி முகாமில் 18,08,600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 11,17,471 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டிலிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
95.59 சதவீதம் 18 வயதினருக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 11,89,61,343 (11.89 கோடி ) தடுப்பூசிகள் தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்னும் 4.68 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்தி உள்ளோம்.
இன்னும் 65 நாட்கள் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். பாதிப்பு குறைகிறது என்ற எண்ணத்தை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
செஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கம்மை பரிசோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம்.
கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
மெரினாவில் இருந்து கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை.
அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்களும், வீராங்கனைகளும் சென்னை வந்த வண்ணம் உள்ளனர். இதேநேரம், கொரோனாவோடு சேர்த்து குரங்கம்மை வைரஸ் பாதிப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.
எனவே, செஸ் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.








