நீட் தேர்வில் விலக்கு பெறுவதுதான் அரசின் கொள்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்…

நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதயவியல் கண்காட்சியை பார்வையிட்டு திறன் ஆய்வகம், உடலியல் மறுவாழ்வு, புனரமைக்கப்பட்ட கருத்தரங்கக் கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் மக்கள் பிரதிநிதிகளுக்கு பூங்கொத்து மற்றும் சால்வை அணிவிப்பது அவசியமற்றது என கூறி கையோடு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 10 கோடி செலவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஸ்டான்லி மருத்துவமனை சிறந்த ஓட்டுறப்பு அறுவை சிகிச்சை சேவை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம். இரண்டு முறை சட்ட முன்வடிவு நிறைவேற்றி அனுப்பி உள்ளோம். கடந்த 5-ம் தேதி ஒன்றிய அரசின் குறிப்பு ஆளுநருக்கு அனுப்பி தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒன்றிய அரசின் குறிப்புகளை பெற்றவுடன் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் விரிவாக கலந்து ஆலோசித்து விரிவான விளக்கம் தாயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் முதலமைச்சர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அனுமதி பெற்றவுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். சட்ட வல்லுநர்களை கொண்டு பதில் தயாரித்துள்ளோம் என்றார். மேலும் இது தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? இது மத்திய அரசு வரம்புக்குள் வருகிறதா? நீட் தகுதி அடிப்படையிலான தேர்வு என்றும், வரலாற்று சீர்திருத்தங்களை உருவாக்கும் என்றும், அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறதா எனவும், தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா என்ற கேள்விகள் அடிப்படையில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு குறிப்புகள் அனுப்பி உள்ளது.

விரிவான பதில் அறிக்கை ஒன்றிய அரசிற்கு அனுப்பிய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்கப்படும். செயற்கை கருத்தரிப்பு மையங்கள் குறித்து, 38 மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாளை சுகாதாரத் துறை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாள்தோறும் 1.5 லட்சம் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.