தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்கள்…

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்கள் மூலம் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெறுகிறது.

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் மத்திய – மாநில அரசு பங்களிப்புடன் இலவசமாக போடப்பட்டு வருகின்றன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் அனைத்து தரப்பினருக்கும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவசமாக ‘பூஸ்டர் டோஸ்’ போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தில் இன்று நடைபெறும் 32ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நிலையான முகாம் மற்றும் நடமாடும் முகாம் என்ற அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.