குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவில், எவ்வித அசம்பாதவிதங்களும் நிகழாமல் கண்காணிக்கவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் மொத்தம் 3000 போலீசார் ஈடுபட உள்ளனர்.
இதையும் படியுங்கள் : பெங்களூரு: ஓடும் பைக்கில், மடிக்கணினியில் வேலை செய்யும் பெண் -வீடியோ வைரல்!
அதேபோல் குழந்தை கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்வதற்காக போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.
– அ.சௌமியா அப்பர்சுந்தரம்







