புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்

புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த அக்டோபர் 10-ம்…

புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த அக்டோபர் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். சாதி ரீதியாகவும், பாலின பாகுபாட்டினாலும் வரும் அழுத்தங்களால் தன்னால் முறையாக பணியை செய்ய முடியவில்லை என அறிக்கை வெளியிட்டு ராஜினாமா செய்தது குறித்து விவரித்திருந்தார்.

இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? இல்லையா? என குழப்பம் நீடித்து வந்தது. சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அரசாணையும் புதுச்சேரி அரசு பிறப்பிக்கவில்லை. ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும், புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

அண்மையில் புதுச்சேரியில் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகம் செய்தி வெளியிட்டது. இதனால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? இல்லையா? என்ற குழப்பம் மேலும் அதிகரித்தது.

இதையும் படியுங்கள் : ஈரோட்டில் ‘லியோ’ பட காட்சிகள் திடீர் ரத்து – திரையரங்கு நிர்வாகத்தினருடன் ரசிகர்கள் வாக்குவாதம்

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையின் அடிப்படையில் சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து அதிகாரப்பூர்வமாக சந்திர பிரியங்கா நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.