ஈரோட்டில் தனியார் திரையங்கு ஒன்றில் ‘லியோ’ திரைப்படத்தின் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், விஜய் ரசிகர்கள் திரையரங்க நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரான விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.148.5 கோடி வசூலைக் குவித்தது.
எதிர்பார்ப்புகளுக்கு இணையாக திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்களை எதிர்கொண்டது. படத்தின் அதிகாலை 4 மற்றும் 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு படக்குழு அனுமதி கோரிய நிலையில், காலை 9 மணிக்கே முதல் காட்சியை திரையிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 19-ம் தேது தமிழ்நாட்டில் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு அடுத்த அசோகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னபூரணி திரையரங்கில் ‘லியோ’ படத்தின் காலை 9 மணி காட்சியை பார்ப்பதற்காக பலர் திரையரங்கில் குவிந்திருந்தனர். அப்போது, 9 மணி காட்சிகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திரையரங்கின் புரொஜெக்ட்டர் பழுதாகி விட்டதால் காலை மற்றும் பிற்பகல் காட்சிகளை ரத்து செய்துள்ளதாகவும், விரைவில் சரிசெய்து மாலை காட்சிகளை திரையிட முயற்சிப்பதாகவும் திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து ‘லியோ’ படத்தை பார்க்க முடியாமல், விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.








