கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது எனக்கோரி தர்மயுத்தம் நடத்தினார். அது அப்போது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபாணியில் ஓபிஎஸின் இரண்டாவது…

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது எனக்கோரி தர்மயுத்தம் நடத்தினார். அது அப்போது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபாணியில் ஓபிஎஸின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் தற்போது ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு வீட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பங்களாவில் அதிகாலை 3 மணியளவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார். கொள்ளை கும்பல் கொடநாடு பங்களாவில் எதையோ கொள்ளை அடித்து சென்றது.ஆனால் என்ன கொள்ளை போனது என்பது குறித்து உறுதியாக தகவல்கள் இல்லை ஏனெனில் ஜெயலலிதா உயிருடன் இல்லை. சசிகலா அப்போது சிறையில் இருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் நடந்த அடுத்த இரண்டு மாதங்களில் ஜெயலலிதாவின் ஓட்டுநராக இருந்த கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். இந்த நிகழ்வு நடந்து 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் நடந்த இன்னொரு வாகன விபத்தில் சயான் தன் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்தார். அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் கொடநாட்டில் சி.சி.டி.வி பொறுப்பாளராக இருந்தவர் அடுத்த சில மாதங்களில் உயிரை மாய்த்துக்  கொண்டார்,

இப்படி திகில் படங்களை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து கொலைகள் நடந்த இவ்வழக்கில் அப்போது ஆளுங்கட்சியாக இருந் அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெகல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாம் மேத்யூ குற்றம் சாட்டினார். இதனால் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நீதி வேண்டும் என்ற தலைப்பில் ஓபிஎஸின் மகன் டுவிட் ஒன்றினை நள்ளிரவில் போட்டுள்ளார். அதில், “எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை  கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அஇஅதிமுக இயக்கத்தின் உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன், இவண், அம்மாவின் உண்மை தொண்டன் வி ப ஜெயப்பிரதீப்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமையா ? இரட்டை தலைமையா ? என்ற விவகாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கும்நிலையில், தன் தந்தையின் எதிர் முகாமை சேர்ந்தவர்களை சீண்டுவதற்காகவே அவர் இப்படி டுவிட் போட்டிருக்கலாம் என பேசப்படுகிறது.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.