கோடநாடு வழக்கு, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது முடிவிற்கு வரும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”தொழில் அதிபர்களுக்கான அரசாக இந்த திமுக அரசு உள்ளது. 12 மணி நேரம் வேலை திட்டத்தை எதிர்த்து ஏற்கனவே அறிக்கையாகவே வெளியிட்டுள்ளேன். 12 நேரம் வேலை என்பது குறித்து அவரது கூட்டணிக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதை எதிர்த்த மு.க.ஸ்டாலின், ஆளும் கட்சியாக வந்தபின் நிறைவேற்றுகிறார். இது தொடர்பாக நான் 2 மணி நேரம் பேசினேன். ஆனால் திமுக ஊடகத்தை மிரட்டி தடை செய்ய சொல்லியுள்ளது. ஊடகத்துறை சரியாக இருந்தால்தான் நாட்டில் பல பிரச்னைகள் சரியாகும். எங்களுக்கு ஆதரவாக செய்தி போடச் சொல்லவில்லை. நடுநிலையுடன் செய்தி வெளியிடுங்கள்.
அமைச்சர் பிடிஆர்-ன் ஆடியோ விவகாரத்தில், எங்களுக்கு சந்தேகமே அவர் அறிக்கை வெளியிட்டது தான். ஆடியோ புனையப்பட்டதா? இல்லையா? என்பதை முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும். ஓபிஎஸ், அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்திய விவகாரத்தில், எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவெடுப்போம்.
கோடநாடு விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். வழக்கு தொடுத்தது, விசாரணையை துவங்கியது அதிமுக. கொரோனா காரணமாக சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால் இன்று குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியது திமுக அரசு. சிந்துபாத் கதை போல இந்த வழக்கு தொடர்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி வரும்போது இந்த வழக்கு முடிவிற்கு வரும்.
பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பேசும் அண்ணாமலை பற்றி கேட்காதீர்கள். அவரைப் பற்றி பேச வேண்டாம். கூட்டணி குறித்து அவரை விட டெல்லியில் உள்ள மோடி, அமித்ஷா தான் முடிவு செய்ய வேண்டும். இந்த பாஸ்-ஐ விட பெரிய பாஸ் டெல்லியில் உள்ளனர். அதிமுகவை பொறுத்தமட்டில் நானும் தொண்டன் தான். தலைவன் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை, தேனீ போல் செயல்பட்டு கழகத்தை காப்பாற்றுவேன்” என்று தெரிவித்தார்.








