“குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப்பாடுகிறாய்”

மயக்கும் குயில், மெல்லிசை ராணி, பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 23, 1938). ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பள்ளப்பட்லாவில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியினருக்‍கு மகளாக பிறந்தவர்…

மயக்கும் குயில், மெல்லிசை ராணி, பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 23, 1938).

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பள்ளப்பட்லாவில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியினருக்‍கு மகளாக பிறந்தவர் ஜானகி. குழந்தையாக இருக்‍கும்போதே பாடத் தொடங்கிய ஜானகி, 20 வயதில் சென்னைக்கு வந்து ஏ.வி.எம். ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்திற்கு ஹம்மிங் பாடகியாக சேர்ந்தார். 1957ம் ஆண்டில் வெளியான “விதியின் விளையாட்டு” திரைப்படத்தில் ‘இசையமைப்பாளர் சலபதிராவ் இசையில் ‘பெண் என் ஆசை பாழனாது ஏனோ?” என்ற பாடலுடன் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.

தமிழில் 1957-ம் ஆண்டு வெளியான மகதல நாட்டு மேரி திரைப்படத்தில் ”கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை தன் உரு மாறி வந்து தேன் மாரி பெய்யுதே” என்ற பாடலை பி.​பி.சீனிவாசுடன் இணைந்து பாடினார். அதன் பின்னர் தென்னிந்திய திரைவானில் மறக்க முடியாத ஜானகி என்ற கவிக்குயில் சிறகடிக்கத் தொடங்கியது. கே.பி.சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி பி.சுசிலா என பலரும் ராஜாங்கம் நடத்திய நிலையில் திரையுலகில் தனக்கென தனி ராஜபாட்டை நடத்தினார் ஜானகி. பாதை தெரியுது பார் படத்தில் அன்பாலே தேடிய, காலையும் நீயே, மாலையும் நீயே போன்ற பாடல்களில் ஜானகியின் ஹம்மிங் ரீங்காரமிட்டது.

1962-ஆம் ஆண்டு வெளியான கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற “சிங்கார வேலனே தேவா” பாடல், 2 இடங்களில் பதிவானது… தயாரிப்பாளர் ராமனின் ஸ்டூடியோவில் ஜானகி பாட, பாடலோடு ஒலிக்கும் நாதஸ்வரத்தை, நாதசுர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் வேறு ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் வாசித்தார். இரண்டு டிராக்கில் பதிவு செய்யப்பட்டு மிக்சிங் செய்யப்பட்டு வெளியானது. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, இந்த மன்றத்தில் ஓடிவரும், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என தன் பங்குக்கு பாடி மகிழ்வித்தார் ஜானகி…

1970-களில் மத்தியில் அறிமுகமான இளையராஜா எஸ். ஜானகியின் பலம், பாவம் அறிந்து பாட வாய்ப்பளித்தார். அன்னக்கிளி உன்னைத் தேடுதே..மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்.. என பாடல்கள் பாடி 4 முறை தேசிய விருது, 12 முறை கேரள அரசின் விருது, 6 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகி விருதுகள் ஜானகியால் அழகுபெற்றன… மலையாளத் திரைப்படங்களில் அதிகபட்ச விருதுகளை வென்ற மலையாளி அல்லாத ஒரே கலைஞர் எஸ் ஜானகி என்ற பெருமையை பெற்றார். இசையமைப்பாளர்கள் எம். எஸ். விஸ்வநாதன் , இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மாநில விருதுகளை வென்ற ஒரே பாடகி எஸ் ஜானகி மட்டுமே. செந்தூரப் பூவே எனப்பாடி ஓயாது பாடிப் பறந்து திரிந்து, பாடியது போதும் என ஒதுங்கிவிட்டாலும், ஓயாத தென்றலாக,,, வாசம் செய்கிறார் கவிக்குயில் ஜானகி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.