கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் 103 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது. 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடபெற்று வருகிறது.

கடந்த வாரம் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிமுக பிரமுகரும், மர வியாபாரியுமான சஜ்ஜீவனிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். நேற்று சஜ்ஜீவன் சகோதரர் சிபியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூங்குன்றன் 15 ஆண்டுகளுக்கும் மேல், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். போயஸ் கார்டன், கொடநாடு என்று ஜெயலலிதா எங்கு சென்றாலும், அவரது நிழல் போல உடன் பயணித்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா சம்மந்தப்பட்ட பல விஷயங்கள் அவருக்கு தெரியும். கொடநாடு வழக்கைப் பொறுத்தவரை, அங்கு திருடப்பட்ட விஷயம் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அமைச்சர்கள் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதாகவும், பணம், பொருள்கள் திருடப்பட்டிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனால் எஸ்டேட் குறித்து நன்கறிந்த சசிகலாவிடம் கொடநாட்டில் என்னனென்ன பொருள்கள் இருந்தன என்று போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு சசிகலா சில பதில்களை வழங்கியுள்ளார். அதேபோல கொடநாடு எஸ்டேட் குறித்து சஜ்ஜீவனும் நன்கறிந்தவர். அவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், “கொடநாடு எஸ்டேட்டில் என்ன மாதிரியான பொருள்கள் இருந்தன, ஜெயலலிதா அறையில் என்ன விஷயங்கள் இருந்தன, என்ன மாதிரியான ஆவணங்கள் இருந்தன.” என்று பூங்குன்றனிடம் விசாரித்து வருகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய  விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.