இபிஎஸ் தரப்புக்கு அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணையின் போது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது எனவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை எனவும், மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த போலீசாரும் இல்லை எனவும், என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது எனவும் தெரிவித்தார். கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர், சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும், கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம் என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வாசித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக அலுவலகத்தின் சாவியை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அங்கு அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி, அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தீர்ப்பினையடுத்து, சென்னையிலுள்ள எடப்பாடி பழனிசாமி இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







