அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டன.
வணிக முத்திரையுடன் விற்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி கடந்த 18ம் தேதி முதல் விதிக்கப்பட்டுள்ளது.
இதை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.
இதையடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையிலும் தொடர் அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பி கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை உயர்ந்துள்ள பொருட்களை அவர்கள் காட்சிப்படுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதேபோல், நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சீக்கிய சிறைவாசிகளை உடனே விடுவிக்கக் கோரி சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதலும், அக்கட்சி எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதலும் நாடாளுமன்ற வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால், விவாதம் நடத்த காங்கிரஸ் தயராக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், அவர் குணமாகி வந்த உடன் இது குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தை செயல்படவிடால் முடக்க வேண்டும் எனும் நோக்கில் காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.












