இந்தியா கட்டுரைகள்

எலுமிச்சை ஜூஸ் விற்ற ஊரில் எஸ்.ஐ: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஆனி சிவா


கிருத்திகா

கேரளாவில் கடந்த இரு தினங்களாக, ஒரு புரட்சியாளரின் பெயரை போன்று உச்சரிக்கப்படுகிறது ஆனி சிவா” என்ற பெண்ணின் பெயர்… யார் இந்த ஆனி சிவா? இப்படித்தான் இணையத்திலும் பலர் தேடினர். அப்போது தான், அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
திருவனந்தபுரம் கஞ்சிராம்குளத்தை சேர்ந்த ஆனி சிவா, கல்லூரி முதலாமாண்டு பயிலும்போதே காதல் வயப்பட்டு, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 18 வயதிலேயே காதல் திருமணம் செய்துள்ளார்.
ஒரு குழந்தைக்கு தாயான பிறகு தான் அந்த துயர நிகழ்வு நடந்தது. ஆம், கணவரால் கைவிடப்பட்டு நிர்க்கதியானார் ஆனி சிவா.

கடும் அதிர்ச்சி, மன அழுத்தம், அடக்க முடியாத அழுகை, மனமுடைந்து போயிருந்த ஆனி சிவாவுக்கு பெற்றோர் ஆதரவும் கிடைக்கவில்லை. கையில் 6 மாத ஆண் குழந்தையுடன் வறுமையின் வாடியவருக்கு அவரது பாட்டி ஆதரவு கரம் நீட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாட்டியின் குடிசையில், அடுத்த வேளை சாப்பாட்டிற்கே என்ன செய்வதென தெரியாமல் திணறிய போதுதான், வர்கலா கடற்கரையோரம் எலுமிச்சை ஜூஸ் விற்க தொடங்கினார். வீடு வீடாக சென்று சோப்பு உள்ளிட்டவை விற்பது, திருவிழாக்களில் ஜூஸ், ஐஸ்கிரீம் கடைகள் போடுவது என அத்தனை வேலைகளையும் செய்தார்.

இந்த நிலையில் தான், 2014ம் ஆண்டு நண்பரின் உதவியால் தேர்வெழுதி பெண் காவலராக பணியில் சேர்ந்துள்ளார் ஆனி சிவா. இக்கட்டான சூழலிலும், பெண் காவலராக பணியாற்றியவர், தொடர்ந்து எஸ்.ஐ தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார். விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் காவல் உதவி ஆய்வாளராக ஆனி சிவாவை கடந்த 25ம் தேதி பதவியில் அமர்த்தியது.

எந்த ஊரில் வயிற்றுப்பிழைப்புக்காக எலுமிச்சை ஜூஸ் விற்றாரோ, அதே ஊரில் இப்போது காவல் உதவி ஆய்வாளர். ஆனி சிவாவை இகழ்ந்தவர்கள் இப்போது கையெடுத்து வணக்கம் சொல்கின்றனர்.
மன உறுதிக்கும் நம்பிக்கைக்கும் அடையாளம் என ஆனி சிவாவை கேரள காவல்துறை புகழ, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், ஆனியின் வெற்றி, பலரது கனவுகளுக்கு ஊக்கமளிக்கும் என பாராட்டினார்.தோல்வியால் துவண்டு கிடக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆனி சிவா ஒரு புரட்சி அடையாளமாகியிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram